📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:40:38
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58ஆவது ஆண்டு விழா.

செய்தி சுருக்கம்: சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல். நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கலந்து கொண்டு, கல்வி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.
.கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58ஆவது ஆண்டு விழா

கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58ஆவது ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவர் திரு. ஜ.பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தெ. வேணுகோபால் அவர்கள் 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையினை வழங்கினார்.
ஹெச்.சி.எல். (HCL) டெக்னாலஜிஸ், கார்ப்பரேட் துணைத் தலைவர் மற்றும் உலகளாவிய எட்டெக் (EdTech) வணிகத்தின் தலைவர் திருமதி. ஸ்ரீமதி சிவசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் அவர்கள் 2021 வி-குவால் (WeQual–Wall Street Journal) அமைப்பில் ஆசிய – பசிபிக் பிராந்திய வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டவர், உலகின் ‘சிறந்த 25 பெண் தலைவர்களில்’ ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பு, உலகளாவிய அறிக்கையிடல் முன்முயற்சிகள், உலகப் பொருளாதார மன்றம், நிலையான மேம்பாட்டிற்கான உலக வணிகக் குழு நாஸ்காம், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு, பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் ஐ.ஐ.ஐ.டி., ஆகியவற்றில் உறுப்பினராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
அவர், கல்வி என்பது மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமென்றும், அது அவர்களின் தனிப்பட்ட மற்றும் வேலைவாய்ப்பிற்கான முன்னேற்றத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டுமென்பதுடன், தனது கல்விப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, தாய்மொழியில் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தையும், குறிப்பாகத் தமிழ்மொழியின் செழுமையையும், அழகைப் பற்றியும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தற்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை மனிதர்களுக்கு அபாயமாகப் பார்க்காமல் உதவியாகப் பார்க்க வேண்டும் என்றும், வருகின்ற ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதால், மாணவர்கள் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், மாணவர்கள் ஆர்வத்தையும், திறமையையும் அடிப்படையாகக் கொண்டு எதிர்கால பணியினைத் தேர்வு செய்ய வேண்டுமென்றும், அதற்கேற்ப, தொடர்ந்து கற்றுக் கொள்ளும் மனப்பாங்குடன் இருந்து (YouTube) போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி பல்வேறு புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கமளித்தார். குறிப்பாகப் பெண்கள் அதிகாரமளிப்பு பற்றிப் பேசும்போது, ஒவ்வொரு பெண்ணும் தங்களது தேர்வுகளில் நம்பிக்கையுடன் நின்று தங்கள் இலக்குகளை அடைய வேண்டும், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் பங்கு எதிர்கால பணிகளுக்கு ஏற்ற சிறந்த (AI) கருவிகள் மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் தொடர்புத்திறன் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த மாணவர்களின் வினாக்களுக்கும், சிறந்த கருத்துகளுடன் கூடிய பதிலுரையை வழங்கினார். கல்லூரி நிர்வாகமும், பேராசிரியர்களும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கி இளம் தலைமுறையினரின் திறமைகளை வளர்த்து வருவதற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
2025-2026ஆம் கல்வியாண்டில் பல்வேறு துறைகளில் தங்களுடைய தனித்த திறன்களால் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், முனைவர் பட்டம் பெற்ற மூன்று பேராசிரியர்களுக்கும், சிறப்புநிகழ்வுகளில் பங்காற்றிய பேராசிரியர்களுக்கும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டத்தில் சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கும், CA, ACS, CMA ஆகிய மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்ற ஒன்பது (9) சாதனையாளர்களுக்கும், சிறந்த நேர்மையை வெளிப்படுத்திய மாணவிக்கும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிறைவாகக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் மா.ராஜ_ அவர்கள் நன்றியுரை வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
வெளியிடப்பட்ட தேதி 18/03/2026 | பார்வைகள்: 31

x